ராசிபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்!
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில், சித்திரை மாத திருத்தேர் பெருவிழா, ஏப்ரல், 22ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. மறுநாள், 23ம் தேதி முதல், மே, 6ம் தேதி வரை, பல்வேறு சமூகத்தினர் சார்பில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், மாரியம்மன் ஸ்வாமி அருள் பாலித்தார். 6ம் தேதி மாலை, அக்னி கரகம் ஊர்வலம் நடந்தது. 7ம் தேதி காலை ஸ்வாமி வெள்ளி மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீ மிதி விழாவில், பூசாரிகள் முதலில் தீ மிதிக்க, தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். திரளான பெண்கள் அக்னி சட்டியுடனும், கை குழந்தைகளுடனும் தீ மிதித்தனர். மாலை, 4 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து, தேரை இழுத்தனர். இன்று (8ம் தேதி) அப்பள உற்பத்தியாளர்கள் சார்பில், சத்தாபரணம் நடக்கிறது. இதையொட்டி, ஸ்வாமி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 10ம் தேதி காலை, 8 மணிக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது.