உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனித குலத்தை பண்படுத்தி நல்வழிப்படுத்தும் ராமாயணம்!

மனித குலத்தை பண்படுத்தி நல்வழிப்படுத்தும் ராமாயணம்!

சேலம்: தேசிய சேவா சமிதி சார்பில், சேலத்தில், ராமாயண தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில், நேற்று, ஆர்.பி.வி.எஸ். மணியன் பங்கேற்று பேசியதாவது: ராமாயண காவியத்தில், மனித குலத்தை பண்படுத்தி, நல்வழிப்படுத்தும் வகையிலான பல்வேறு சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான், இன்று ராமனை தெய்வமாகவும், வீரனாகவும், நாம் வழிபட்டு வருகிறோம். மனிதன் வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய அனைத்து விஷயங்களும், ராமாயணத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மனிதர்கள் இடையே நட்பு தோன்றுவதற்கு சந்திப்புக்களே காரணமாக அமைகிறது. நட்பு மட்டுமின்றி மனிதன் கை கொடுத்தல், கரம் பிடித்தலில் கூட ராமாயண நிகழ்வுகளே தொடர்கிறது. இலங்கையில், சீதைக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட போதிலும், பூர்வீக நாட்டில் இருந்த திருப்தி, இலங்கையில் அவளுக்கு ஏற்படவில்லை. அதே மனநிலை தான், இலங்கையில் இருந்து அகதிகளாக பல்வேறு நாடுகளில் குடியேறிய மக்களுக்கும் உள்ளது. வசதி, வாய்ப்புகள் கிடைத்த போதிலும், சொந்த பூமியில் வாழும் திருப்தி கிடைக்க வில்லை. மனிதனுக்கு பலவீனம் அதிகரிக்கும் போது, கவலை ஏற்படும். துன்பம் வரும் போது, மனிதன் கவலைப்பட மாட்டான். அதிலிருந்து விடுபடும் ஆற்றல் இல்லாதவன் தான் கவலைப்படுவான். மனிதர்களை பண்படுத்தி, பக்குவப்படுத்தும் காவியமாக ராமாயணம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !