மங்கலதேவி கண்ணகி கோயில் விழா: பலத்த கெடுபிடி!
கூடலூர்:தமிழக - கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் விழா, கேரள வனத்துறையினரின் பலத்த கெடுபிடிகளுடன் நடந்து முடிந்தது.தேனி மாவட்டம் கூடலூர் அருகே, தமிழக - கேரள எல்லைப்பகுதியான பளியன்குடி வண்ணாத்திப்பாறை மலை உச்சியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஆண்டுதோறும், நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவில், தமிழக, கேரள பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வர். நேற்று நடந்த விழாவையொட்டி, குமுளியில் இருந்து, 15 கி.மீ., தூரமுள்ள கோயிலுக்கு, அதிகாலை 5:00 மணி முதல், பக்தர்கள் ஜீப்பிலும், நடந்தும் வந்தனர். ஜீப் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி கேரள வனத்துறை மூலம் செய்து தரப்பட்டிருந்தது. மேலும், ஆபத்தான வளைவுகள் உள்ள பாதையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோயில் வளாகத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள், 2 மணி நேரம் வரை காத்திருந்து வழிபட்டனர். மங்கலதேவி கண்ணகி அம்மன், சர்வஅலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழக பூஜாரி ராஜலிங்கம், அர்ச்சனை செய்தார். காலையில் அம்மனுக்கு மலர் வழிபாடு, யாகபூஜை நடந்தது. பெண்களுக்கு மங்கல நாண், வளையல் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு வழிபாடும், பூமாரி விழாவும் நடந்தது. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர், கும்பம் இட்டு, யாக பூஜை நடத்தினர். குடந்தை தமிழ்ச்சங்கம் சார்பில், சிலப்பதிகார பாடல்கள் பாடப்பட்டது. பளியன்குடி வனப்பகுதி வழியாக, நடந்து வந்த தமிழக பக்தர்களுக்கு கண்ணகி அறக்கட்டளை சார்பில், தண்ணீர் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கூடலூரில் இருந்து பளியன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தது. கூடலூர் நகராட்சி சார்பில் பளியன்குடியிலும், குமுளியிலும் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டிருந்தது. மருத்துவ துறை சார்பில், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
கேரள வனத்துறை கெடுபிடி: ஒவ்வொரு ஆண்டும் கோயில் வளாகத்திற்குள் பத்திரிகையாளர்கள் போட்டோ எடுப்பது வழக்கம். இம்முறை, போட்டோ எடுத்தபோது, தேக்கடி ரேஞ்சர் மனுசத்தியன் தடுத்தார். பலத்த வாக்குவாதங்களுக்குப் பின், போட்டோ எடுக்க அனுமதிக்கப்பட்டது. முன்னதாக, கேரள நிருபர்கள் போட்டோ எடுத்த போது அவர்களை யாரும் தடுக்கவில்லை.பக்தர்கள் சிலப்பதிகார பாடல்களை, கஞ்சரா மேளத்தை அடித்து பாடிய போது, வனத்துறையினர் தடுத்தனர். மீண்டும் உயரதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அனுமதிக்கப்பட்டது. அம்மனுக்கு அலங்காரம் செய்ய கொண்டு சென்ற பூஜை பொருட்களையும், வாழை மரங்களையும் அதிகாலையில் அனுமதிக்காமல், தமிழக பக்தர்களின் பலத்த வாக்குவாதங்களுக்குப் பிறகே அனுமதித்தனர். கோயில் வளாகத்தில் தமிழக பக்தர்கள் பொங்கல் வைக்க, பலத்த கட்டுப்பாடுகளை விதித்தனர். அதே வேளையில் கேரள பக்தர்கள் எவ்வித கெடுபிடியுமின்றி பொங்கல் வைத்தனர்.
குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதையில், கொக்கரக்கண்டம் அருகே ரோடு சீரமைக்காததால், அண்மையில் பெய்த மழையால், சேறும் சகதியுமாகி 2 ஜீப்புகள் சிக்கிக் கொண்டன. இதனால், 2 மணி நேரம் வரை ஜீப்புகள் கடந்து செல்ல முடியவில்லை. பக்தர்கள் காத்திருந்து சிரமப் பட்டனர். நடந்து சென்ற பக்தர்கள் அட்டை பூச்சிகளின் கடியால் சிரமப்பட்டனர். இந்த ஆண்டு முதன்முறையாக, கோயிலில் சில பக்தர்கள் மொட்டை போட்டனர். மதுரை, நாகப்பட்டினத்தில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தனர். முல்லை பெரியாறு அணை தீர்ப்பு எதிரொலியாக, கேரள போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.