கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம், கூத்தாண்டவர் கோவிலில், தேரோட்டம், கோலகலமாக நேற்று நடந்தது. விழுப்புரம் மாவட் டம், உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம், கூத்தாண்டவர் கோவிலில் கடந்த, 29ம் தேதி சித்திரை பெருவிழா துவங்கியது. கடந்த, 13ம் தேதி, திருநங்கையர், பூசாரிகளிடம் தாலி கட்டி, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, அரவான் சிரசுக்கு கண் திறக்கப்பட்டது. கீரிமேட்டிலிருந்து, புஜம், மார்பு உருவங்களும், நத்தம் கிராமத்திலிருந்து, கை, கால் உருவங்களும் எடுத்து வரப்பட்டன. அவற்றை, 21 அடி உயர தேரில், பூசாரிகள் பொருத்தினர். சிவலிங்க குளம் கிராமத்திலிருந்து குடை கொண்டு வரப்பட்டது. அதை தேரில் பொருத்தியதும், காலை, 7:45 மணிக்கு, தேரோட்டம் துவங்கியது. தேர் சென்ற வழியில், 108 தேங்காய்கள் வைத்தும், குவியல் குவியல்களாக கற்பூரங்களை ஏற்றியும், திருநங்கைகள் கும்மி அடித்து ஆடிப் பாடினர். விவசாயிகள், விளை பொருட்களை, சுவாமி மீது வீசி, நேர்த்தி கடனை செலுத்தினர். நத்தம், தொட்டி வழியாக, தேர் பந்தலடிக்கு சென்றடைந்தது. பகல், 12:00 மணிக்கு, அழுகளம் நிகழ்ச்சியில் அரவான் களப்பலி நடந்தது. தாலிகளை அறுத்தெறிந்த திருநங்கைகள், விதவைக்கோலம் பூண்டு, ஒப்பாரி வைத்தனர்; சிலர், தங்கத் தாலியை, சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தினர். மாலை, 5:00 மணிக்கு, உறுமை சோறு (பலிசாதம்) படையல் நடந்தது. மாலை, 7:00 மணிக்கு, காளிக்கோவிலில் அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. அரவான் சிரசு மட்டும் பந்தலடிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, மலர் அலங்காரம் செய்து, கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மஞ்சள் நீர் மற்றும் தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா, இன்று முடிகிறது.