ஜாத்திரை திருவிழாவில் பூ கரகத்துடன் ஊர்வலம்!
திருத்தணி : கங்கையம்மன் ஜாத்திரை திருவிழாவில், பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து, பூ கரகத்துடன் ஊர்வலம் சென்றனர். திருத்தணி அடுத்துள்ள கீழாந்தூர் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது.தினமும், காலை 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கடந்த, 8ம் தேதி கங்கா, கங்காதரன் திருக்கல்யாணம் நடந்தது.விழாவின் நிறைவு நாளான நேற்று, கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நடந்தது. மூலவருக்கு, காலை 10:00 மணிக்கு பால், பழம், தயிர், இளநீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.காலை 11:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து மாலை 4:00 மணிக்கு அலகு குத்தி, டிராக்டர் இழுத்தும், அந்தரத்தில் தொங்கியவாறு ஊர்லமாக வந்தனர்.மேலும் சில, பக்தர்கள் காளிவேடம், பெண் வேடம் மற்றும் வீரபத்திரர் போன்ற பல்வேறு வேடமிட்டு, பூ கரத்துடன் ஊர்வலம் வந்தனர்.இரவு, கங்கையம்மன் திருவீதியுலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.