தாடிக்கொம்பு ஆற்றில் இறங்கி அருள்பாலித்த அழகர்
தாடிக்கொம்பு : சித்திரை திருவிழாவைமுன்னிட்டு, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சித்ரா பவுர்ணமியான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சவுந்திரராஜ பெருமாள், அழகராக பச்சைப்பட்டு உடுத்தி,குதிரை வாகனத்தில் சன்னதி முன்உள்ள மண்டபத்தில் இருந்து புறப்பட்டார். நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். நேற்று காலை 7.10 மணிக்கு குடகனாற்றில் இறங்கினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளுக்கு எதிர்சேவை செய்தனர். அழகர், மண்டூக மகரிஷிக்கு சேவை தந்தருளினார். பின்பு யானைக்கால் ஆத்துப்படித்துறை மண்டபத்தில் "திருக்கண் தீபாராதனை நடந்தது. காலை 7.45 மணியளவில் மண்டபத்தில் இருந்து சுவாமி "பல்லக்கில் திண்டுக்கல் நகருக்கு புறப்பாடு நடந்தது. செல்லும் வழி உள்ள மண்டகப்படியில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமியின் அருள்பெற்றனர். பின்பு தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள வணிக வைஸ்யரின் கருப்பண சுவாமி கோயிலில் இரவு தங்கினார்.
வறண்ட ஆற்றில் அழகர் : தாடிக்கொம்பில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கினார். கடும் வறட்சி காரணமாக ஆற்றில் சிறிது கூட தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாமல் இருக்கும் போது, லாரிகளில் தண்ணீர் கோண்டு வந்து பாரம்பரியப்படி நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் குடகனாற்றில் தண்ணீர் இல்லாததது தெரிந்தும், முன்னேற்பாடாக தண்ணீர் கொண்டுவர ÷ காயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் மண்டகப்படிதாரர்களிடம் கட்டணம் வசூலிப்பதை தவறாமல் செய்தனர். ஆற்றில் இறங்குவதை குறிக்கும்விதமாக வாண வெடியும் விடப்படவில்லை. வறண்ட ஆற்றில் அழகர் இறங்கியதால், பக்தர்கள் மனவருத்தமடைந்தனர்.
அய்யம்பாளையம்:சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மருதாநதி ஆற்றில் அழகர் பச்சை உடுத்தி இறங்கினார். சித்தரேவு வரதராஜபெருமாள் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே10ல் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன் தினம் மாலை பெருமாள், அழகர் அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் நகர் வலம் புறப்பட்டார். நேற்று காலை 7.40 மணியளவில் பச்சை பட்டு உடுத்தி அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷங்களுடன், கைகளைத் தட்டி ஆரவாரத்துடன் அழகரை வரவேற்றனர். யாதவர் குலத்தோர் சார்பில் எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து அழகர், அய்யனார் கோவிலுக்குச் சென்று, இரவு ஆயிர வைசியர் மண்டகப்படியில் தங்கினார். இன்று தசாவதாரம் நடக்கிறது. நாளை ஆஞ்சநேயர் அலங்காரத்தில் அய்யம்பாளையத்தில் நகர் வலம் வருகிறார். நாளை மறுதினம் பிரியாவிடையுடன் சித்தரேவு செல்கிறார். முன்னதாக கதிர்நாயக்கன்பட்டி, நெல்லூர், கணேசபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இன்ஸ்பெக்டர்கள் வினோஜி, கருப்புச்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் சுவாமி ஆற்றில் இறங்கி எதிர்சேவை செய்தார். சின்னாளபட்டியில் இரு பகுதிகளில் சித்ராபவுர்ணமி திருவிழா நடக்கிறது. மேட்டுப்பட்டி விழாவில், சுந்தரராஜ பெருமாள் சுவாமி, பச்சை பட்டுடுத்தி, அஸ்வ வாகனத்தில் அமர்ந்து, சீவல்சரகு குடகனாற்றில் இறங்கி எதிர்சேவை செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், ஆதிலட்சுமிபுரம்,பொம்மணம்பட்டி,ஜெ.புதுக்கோட்டை ஆகிய கிராமங்களில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில், செக்காபட்டி தேவாங்கர் மகாஜன சபை சார்பில், காந்திமைதானத்தில் உள்ள தசாவதார கொட்டகையில் தங்கினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சுந்தரராஜபெருமாள் திருப்பணி நலச்சங்கத்தினர் ,விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
*கீழக்கோட்டை விழாவில், ராமஅழகர் சுவாமி,பச்சை பட்டுடுத்தி, அஸ்வ வாகனத்தில் அமர்ந்து,காந்திகிராமம்,வெள்ளியங்கிரியில் உள்ள சஞ்சீவி ஆற்றில் இறங்கி,எதிர்சேவை செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் காந்திகிராமம், செட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் பொன்விழா மைதானத்தில் உள்ள தசாவதார கொட்டகையில் தங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ராமஅழகர் சுவாமி தேவஸ்தான கமிட்டியினர்,விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.