காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் சித்ரா பவுர்ணமி பால்குட விழா கோலாகலம்
காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி, பால்குட விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, மேட்டு தண்டலத்தில் கிராம தேவதை கோவிலாக பழண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா விமர்சையாக நடத்தப்படும்.இந்தாண்டு, நேற்று, பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து ஊர்வலம் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதன் பின், மகாஅபிஷேகமும், தீபதூபஆராதனையும் நடந்தது. பக்தர்கள் பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.
பொன்னேரி: இலங்காளியம்மன் கோவிலில், பால்குடம் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி அடுத்த, மாதவரம் கிராமத்தில், செங்குன்றம் சாலையை ஒட்டி, இலங்காளியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று இக்கோவிலில் பால்குடம் மற்றும் தீமதி திருவிழா நடந்தது. காலை, 10:00 மணிக்கு, பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள லட்சுமியம்மன் கோவிலில் இருந்து, பெண்கள் பால் குடங்களை தலையில் ஏந்திவந்து, இலங்காளியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலையில், தீமதி திருவிழாவும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தன.மாதவரம், சைனாவரம், பெருஞ்சேரி ஆகிய கிராம மக்கள் விழாவினை சிறப்பாக நடத்தி வழிபட்டு சென்றனர்.
வாலாஜாபாத்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், 108 பால் குடம் ஊர்வலம் நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், இந்திராட்சி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2ம் ஆண்டு பால்குடம் ஊர்வலம் நேற்று, காலை 11:00 மணி அளவில், கோலாகலமாக நடந்தது. இந்த பால்குடம் ஊர்வலம் கம்மவார்பாளையம் கிராமத்தில் உள்ள, நாகத்தம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, பெரிய பாளையத்தம்மன் கோவில் வழியாக, சந்திர மவுலீஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. அங்கு, சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பால்குடம் ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டை: ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், 108 பால்குட அபிஷேகம் நடந்தது.ஊத்துக்கோட்டை அடுத்த, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ளது ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம். இந்த மன்றம் சார்பில், 2ம் ஆண்டு பால்குட அபிஷேக நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. முன்னதாக, கிராமத்தில் உள்ள நாட்நாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, அம்மன் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின், அங்கிருந்து கிராமத்தைச் சேர்ந்த, 108 பெண்கள் தலையில் பால்குடம் ஏந்திக் கொண்டு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சென்று அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.