சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம்!
பெரம்பலூர்,மே.16- சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று வெகுவிமர்சையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற வடம் பிடித்து தேர் இழுத்தனர். பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழாவை யொட்டி, கடந்த 29ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து, மே 6ம் தேதி இரவு 12 மணியளவில் பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், அதிகாலை 4 மணியளவில் ஸ்ரீமதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் பரிவார தெய்வங்களுடன் நேற்றுமுன்தினம் இரவு வரை திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது.
11ம் தேதி அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்துதலும், 12ம் தேதி நாக்கில் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய மதுரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். சிறுவாச்சூரில் உள்ள ரத வீதிகள் வழியே இழுத்துச் செல்லப்பட்ட திருத்தேர், மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், நாமக்கல், சென்னை, தஞ்சாவூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிற்பகல் 1 மணியளவில் ஸ்ரீமதுரகாளியம்மன் மகா அபிஷேக கமிட்டி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 16ம் தேதி உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஊஞ்சல் நிகழ்ச்சியும் இரவு 11 மணிக்கு மேல் அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடனும் திருவீதி உலாவும், 17ம் தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலாவும், 19ம் தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏறிதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.