திருச்சி சமயபுரம் கோவிலில் பஞ்சப்பிரகார விழா!
திருச்சி: சமயபுரம் கோவிலில் பஞ்சப்பிரகார விழா நடந்தது. திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா, கடந்த, 6ம் தேதி துவங்கியது. 9ம் திருநாளான நேற்று முன்தினம், இரவு, அம்மன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பத்தாம் திருநாளான நேற்று, பஞ்சப்பிரகார விழா நடந்தது. வட திருக்காவிரி என்றழைக்கப்படும், கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஒரு தங்கக்குடம், 25 வெள்ளிக்குடங்களில் திருமஞ்சனம் எடுத்து, யானை மீது தங்கக்குடத்தை வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். மதியம், 1 மணிக்கு அம்மன் புறப்பாடு நடந்தது. மூன்று மணி முதல், 6 மணி வரை, 3 மணி நேரம் திருநீர், நெய், பால், தயிர், கரும்புச்சாறு, மா, வாழை, வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. நள்ளிரவு, 12 மணிக்கு அம்மன் வெள்ளிக்கேடயத்தில் வெண்ணிற பாவாடை அணிந்து, ஐந்து பிராகரங்களிலும் வீதி உலா வந்தார். அம்மன் தினமும் தங்க சிம்ம வாகனத்திலும், முத்துப்பல்லக்கு, தங்க கமல வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம், வெள்ளிக் காமதேனு வாகனம் ஆகியவற்றில் எழுந்தருள்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் தென்னரசு உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.