அழகர் மலையில் கள்ளழகருக்கு வரவேற்பு!
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தந்து, நேற்று காலை அழகர் மலைக்கு திரும்பிய கள்ளழகரை "கோவிந்தா கோஷம் முழங்க, மலர் தூவி, திருஷ்டி சுற்றி பக்தர்கள் வரவேற்றனர். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 10ல் துவங்கியது. மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள, மே 12 மாலை தங்கப் பல்லக்கில் புறப்பட்டார். மே 13ல் மூன்றுமாவடி, புதூர், அவுட்போஸ்டில் நடந்த எதிர்சேவையில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வரலாற்று சிறப்புமிக்க அழகர், வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 14ல் நடந்தது. பின் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், தசாவதாரம், பூப்பல்லக்கு என பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் மாலை புதூரில் இருந்து புறப்பட்ட அழகர், இரவு அப்பன் திருப்பதியில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பின், அதிகாலை புறப்பட்டு கோயிலுக்கு சென்றார். நேற்று காலை 10.30 மணிக்கு கோயில் முன் உள்ள 18ம் படி கருப்பண சுவாமி சன்னதி முன் எழுந்தருளினார். கள்ளழகருக்கு அணிவித்திருந்த மாலைகள், கருப்பண சுவாமிக்கு சாத்தப்பட்டன. பின், அழகருக்கு தீப ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் "கோவிந்தா கோஷம் முழங்க, சுவாமியை மலர் தூவி வரவேற்றனர். 18 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி மூன்று முறை அழகரை வலம் வந்து திருஷ்டி கழித்தனர். கோயிலுக்குள் சென்ற அழகருக்கு தீபாராதனை நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.