கெங்கையம்மன் சிரசுத்திருவிழா: 2 லட்சம் பேர் பங்கேற்பு!
வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில், சிரசு திருவிழாவில், இரண்டு லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. சிரசு திருவிழாவில், தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் வசிக்கும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பர். விழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம், தேரோட்டம் நடந்தது. ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவின், முக்கிய நிகழ்வாக அம்மன் சிரசு ஊர்வலம், சிரசுத் திருவிழா, நேற்று நடந்தது. அதிகாலை, 4 மணிக்கு, பிச்சனூர் பேட்டையில் இருந்து, கெங்கையம்மனுக்கு சீர்வரிசைப் பொருட்கள், மேள தாளங்களுடன் கொண்டு வரப்பட்டது. பின்னர், தர்ணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து அதிகாலை, 5 மணிக்கு அம்மன் சிரசு ஊர்வலம் துவங்கியது.தர்ணம்பேட்டை, என்.ஜி., செட்டி தெரு, காந்தி ரோடு, பழைய மருத்துவனை தெரு, காந்தி ரோடு, ஜவஹர்லால் ரோடு, கோபாலபுரம் வழியாக, ஊர்வலமாக கொண்டு வரப்படும் அம்மன் சிரசு, காலை, 9 மணிக்கு, கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலை வந்தடைந்தது. சிரசு ஊர்வலம் வந்த வழிநெடுகிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று, அம்மனை வழிபாடு நடத்தினர்.காலை, 10 மணிக்கு, கோவில் சிரசு மண்டபத்தில் உள்ள, ஏழு அடி உயர சண்டாளச்சி உடலில், அம்மனுக்கு சிரசு பொருத்தப்பட்டது. தொடர்ந்து, ஊர் மக்கள் சார்பில், கூழ் வார்த்தல் நடந்தது. இந்த, கூழ் வார்த்தல் நிகழ்ச்சிக்கு பின், கெங்கையம்மன் சாந்தம் அடைந்து, சாந்த சொரூபியாக மாறுகிறார். காலை, 10.30 மணிக்கு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு, 8 மணி வரை, தொடர்ந்து, குடியாத்தத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அம்மனுக்கு பக்தர்கள் சிறப்பு அர்ச்சனை செய்தனர். மாலை, 4 மணிக்கு, மா விளக்கு பூஜை நடந்தது. இரவு, 8 மணிக்கு, தாய் வீட்டுக்கு விடை கொடுத்து, கெங்கையம்மன் புகுந்த வீட்டுக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. உடலில் இருந்து, சிரசு பிரிக்கப்பட்டு, கவுண்டய ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பிரம்மாண்டமாக, வாணவேடிக்கையுடன், இரவு, 9.30 மணிக்கு, ஆற்று ஓரம் உள்ள தெரு வழியாக சுண்ணாம்பு பேட்டை சலவைத்துறைக்கு, அம்மன் சிரசு எடுத்துச் சென்று, கண் துடைப்பு நிகழ்ச்சி நடந்தது. அம்மன் சிரசு, பாதுகாப்பாக மீண்டும் முத்தியாலம்மன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிரசுத் திருவிழாவில், இரண்டு லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.வேலூர் மாவட்ட எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், ஏழு டி.எஸ்.பி.,க்கள், 18 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய, 600 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். வேலூர், பேர்ணாம்பட்டு, ஆம்பூர், திருப்பத்தூர், அரக்கோணம், திருவண்ணாமலை, சென்னை, ஆந்திர மாநிலம் சித்தூர், பலமனேர், குப்பம், வி.,கோட்டா கர்நாடக மாநிலம் பெங்களூரூ, மைசூர் ஆகிய இடங்களில் இருந்து, 500 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.