பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் அருகில், காட்டூரில் உள்ள பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோயி லில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் அருகில் காட்டூரில் பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த, 11ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து,16ம் தேதி பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நேற்று இரவு காவிரி ஆற்றில் கரகம் பாலித்து ஊர்வலமாக திருக்கோயிலை வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறும். இன்று காலை அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், இதைத் தொடர்ந்து விழாவின் சிகரமான பெரிய தேர் வீதி உலா நடை பெறும். பின், 20ம் தேதி காலை பெண்கள் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு மேற்கொள்வர். இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். இதில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக நேர்த்திக் கடன் செலுத்துவர். இதைத் தொடர்ந்து, 21ம் தேதி காலை மஞ்சள் நீராடலும், பின்னர் மாலை கரகம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், பக்தர்களும், ஊர்ப் பொது மக்களும் செய்துள்ளனர்.