அடிப்படை வசதிகள் இல்லாத திருமலைக்கேணி முருகன் கோயில்!
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகேயுள்ள திருமலைக்கேணியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து 24 கி.மீ., தூரத்தில் உள்ளது திருமலைக்கேணி. இங்கு, முருகப்பெருமான், குழந்தை வடிவில் சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். எப்போதும் வற்றாத நீர் ஊற்று சுனையும் இங்கு உள்ளது. இதில் இருந்து தண்ணீர் எப்போதும் கொட்டிக் கொண்டே உள்ளது. பெண் பக்தர்கள் குளிப்பதற்கு வசதிகள் இல்லாததால், சிரமப்படுகின்றனர். மயில்கள், குரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளன. கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் என பல விழாக்கள் சிறப்பாக நடக்கிறது. இந்த பகுதியை சுற்றுலா ஸ்தலமாக்க அரசு திட்டமிட்டது. ஆனால், இதற்கான பணிகள் எதுவும் நடக்கவில்லை. பக்தர்கள் கிரி வலம் வருவதற்கு "பேவர் பிளாக் கற்கள் பாதி வழித்தடம் வரை பதிக்கப்பட்டுள்ளது. மீதி பகுதிகள் விடுபட்டுள்ளது. பக்தர்கள் தங்குவதற் விடுதிகளோ, மண்டபமோ கிடையாது. இங்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. பல இடங்களில் குப்பை கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. காலணிகளை வைப்பதற்கு கூட இடம் இல்லாமல் உள்ளது. கோயில் சன்னதியில் இருந்து மேலே செல்லும் பகுதி படிகட்டுக்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கைவிடுத்தும் பலனில்லை. பக்தர்களின் அமர் வதற்கு பெஞ்ச் வசதி, அழகிய பூங்கா உட்பட பல வசதிகளை செய்து, இதை சுற்றுலாதலமாக்கினால் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இங்கு வருவர். மாவட்ட நிர்வாகம் இதற்கான பணிகளை செய்வதற்கு முன்வர வேண்டும்.