சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் 111 நாள் தவவேள்வி!
நாகர்கோவில் : சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் 111 நாட்கள் தவவேள்வி கடந்த 14-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. நாட்டில் மூன்று நீதம் தழைக்கவும், கல்வி, செல்வம், நலம், விவசாயம், வணிகம் தொழில், அரசு மேன்மை மற்றும் ஒவ்வொருதுறையும் சிறப்படைய சுவாமியின் 176-வது ஆண்டு அய்யா வைகுண்டர் தவவேள்வி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தனித்தனி வேண்டுதல்களுடன் இந்த வேள்வி நடைபெறுகிறது. பொதுமக்கள் கடன் தீர்ந்து நிம்மதியுடன் வாழ்வதற்காக நடந்த வேள்வியில் கேரளா மற்றும் லட்சத்தீவு கடன் வசூல் தீர்ப்பாய முன்னாள் நீதிபதி வி.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிராத்தனை செய்தார். நிகழ்ச்சிக்கு அய்யாவழி சமய தலைவர் பால பிரஜாதிபதி அடிகளார் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா சுவாமிகள், வளவன், பேராசிரியர் தர்மரஜினி, சமூக சேவகர் அருள் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அய்யா வழி அன்புக்கொடிமக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு வேண்டுதல்களுடன் இரவு பகலாக நடந்து வரும் தவவேள்வி செப்டம்பர் மாதம் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.