உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் மலையில் வெங்கடாஜலபதி திருக்கல்யாணம்!

பெருமாள் மலையில் வெங்கடாஜலபதி திருக்கல்யாணம்!

துறையூர்: சிரவண உற்சவ விழாவில், துறையூர் பெருமாள் மலை பிரஸன்ன வெங்கடாஜலபதி ஸ்வாமிக்கு உபய நாச்சியாருடன் வேணுகோபால ஸ்வாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. தென்திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் துறையூர் பெருமாள் மலை பிரஸன்ன வெங்கடாஜலபதி ஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார் சகிதம் வைகாசிமாத திருவோண நட்சத்திரத்தில் துறையூர் நகருக்கு எழுந்தரும் வைபவம் இரண்டு நாள் சிரவண உற்சவ விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 20ம் தேதி அதிகாலை மலையிலிருந்து பெருமாள் உபயநாச்சியார் சகிதம் புறப்பட்டு அடிவாரம் அனுமார் கோவிலில் இளைப்பாறி, மாலையில் வேணுகோபால ஸ்வாமி கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. அதில் கோவிலுக்கு வரும் பெருமாள் மலை ஸ்வாமியை பாலக்கரை சென்று வேணுகோபால ஸ்வாமி எதிர்சேவை செய்து அழைத்து வருவது நம் வீட்டுக்கு வரும் விருந்தினரை இன்முகத்துடன் வாசலுக்கு சென்று உபசரிப்பது போல் இருந்தது. நேற்று காலை வாசவி மஹாலிலிருந்து ஸ்வாமிக்கு திருக்கல்யாணம் செய்ய ஆரிய வைஸ்ய சமூகம் சார்பில் சீர்வரிசை தட்டு எடுத்துவந்தனர். தொடர்ந்து பிரஸன்ன வெங்கடாஜலபதி மற்றும் வேணுகோபால் ஸ்வாமிகளுக்கு திருமஞ்சனம், திருக்கல்யாணம், உபயநாச்சியாருடன் நடந்தது. தீபாராதனை செய்து வழிபட்டனர். இரவு மின் அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்கில் சிறப்பு நாதஸ்வர கச்சேரியுடன் ஸ்வாமி நாச்சியாருடன் வீதி உலா கண்டருளி மலைக்கு எருந்தருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !