உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும் இயற்கை தீம் பார்க் கிராமத்து ஆலமரம்!
ஆர்.கே.பேட்டை: கோடை விடுமுறையில், கிராமத்து சிறுவர்களை இயற்கை, தன் பக்கம் இழுத்து வைத்துள்ளது. நவீன பொழுதுபோக்கு அம்சங்கள் எவ்வளவு இருந்தாலும், நீச்சல், ஆலமரத்து ஊஞ்சல், நுங்கு வண்டி உள்ளிட்டவை தான் சிறுவர்களை அதிகம் சுண்டி இழுக்கிறது. கோடை விடுமுறையில், கிணறு, ஆறு, குளம் உள்ளிட்டவற்றில் நீச்சல் பழகுவது, நுங்கு வெட்டி சாப்பிடுவது, அந்த காய்களில் வண்டி செய்து ஓட்டி மகிழ்வது, ஊருக்கு வெளியில் உள்ள கோவில் ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் ஆடுவது உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் கிராமங்களில் இன்றும் காணப்படுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும், காலசக்கரத்தில் இந்த நிகழ்வுகள் இன்றும் அகலாமல் உள்ளது ஆச்சரியம் தான். ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்தானவேணுகோபாலபுரம் கிராமம், மலை சார்ந்த இயற்கையான பகுதி. இந்த கிராமத்தின் கிழக்கே வெங்கம்மாள் கோவில் உள்ளது. கோவிலின் எதிரே, ஆலமரமும், ஆண்டு முழுவதும் தேன்கூடுகள் நிறைந்த பூமரமும் உள்ளன. இங்குள்ள ஆலமரத் தின் விழுதுகளில் பகல் பொழுதில் சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடுகின்றனர்.எவ்வளவு தான் வெயில் கொளுத்தினாலும், இதன் அடியில் குளிர்ச்சி நிலவுகிறது. ஆலமரத்தின் துளிர் பகுதியில் இருந்து அவ்வப்போது, நீர்த்திவலைகள் விழுவது இயற்கையின் அதிசயம்.இதுபோன்ற அதிசயங்கள் தான் நவீன காலத்திலும் சிறுவர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.