குடி மையமாக மாறி வரும் நூறுகால் மண்டபம்!
காஞ்சிபுரம்: வரதராஜபெருமாள் கோவில் நூறுகால் மண்டபத்தின் பாதுகாப்பு இரும்பு தடுப்புகள், சேதமடைந்து வருகின்றன. இதனால், சமூக விரோதிகள், மண்டபத்தை குடி மையமாக பயன்படுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள வரதராஜபெருமாள் கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தின் உள்ளே, மேற்கு ராஜகோபுரத்தின் அருகில், நூறு தூண்களுடன் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இரும்பு தடுப்புகள் மண்டபத்தின் தூண்களில், அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மிக நுட்பமான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், மண்டபத்தின் உள்ளே செல்ல, ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் சுற்றுலா பக்தர்கள், கட்டணம் செலுத்தி உள்ளே சென்று, சிற்ப கலையின் உன்னதத்தை ரசிக்கின்றனர். சிற்பங்களை பாதுகாக்கவும், அவற்றை விஷமிகளிடமிருந்து காக்கவும், அனுமதியின்றி மண்டபத்தின் உள்ளே விஷமிகள் நுழைவதை தடுக்கவும், மண்டபத்தின் வெளிப்புற பகுதியில் உள்ள தூண்களின் இடையே, நன்கொடையாளரின் உதவியுடன், கடந்த 2011ம் ஆண்டு, இரும்பு தடுப்புகளை கோவில் நிர்வாகம் அமைத்தது.
சிற்பங்களை பக்தர்கள் சென்று ரசிப்பதற்காக, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நுழைவாயில்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த வழிகளின் மூலமே, மண்டபத்தினுள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூண்கள் இடையே உள்ள இரும்பு தடுப்புகள், பல்வேறு பகுதிகளில் சரிந்து விழுந்துள்ளன. இதனால், மண்டபத்தின் உள்ளே யார் வேண்டுமானாலும் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அழியும் அபாயம்: மேலும், சில சமூக விரோதிகள், மண்டபத்தை மது அருந்தும் குடி மையமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வரலாற்று சிறப்பு மிக்க கலை பொக்கிஷங்கள் நிறைந்த, நூறுகால் மண்டபத்தின் பாரம்பரியம் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்புகளை சீரமைத்து, மண்டபத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தூண்களின் மேற்பகுதியில் உள்ள சிற்பங்களை படம் பிடிக்க, தடுப்புகளின் மீது ஏறுகின்றனர். இதனால், ஒருசில பகுதிகளில் தடுப்புகள் சரிந்துள்ளன. மேலும், மது அருந்துவதாக கூறப்படுவது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நூறுகால் மண்டபத்தை ஒட்டியே, புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.