திருவண்ணாமலை தீப மலையில் பயங்கரம்: இடி தாக்கி மரங்கள் கருகின!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப மலையில், இடி தாக்கியதில், ஏராளமான மரங்கள் தீப்பற்றி எரிந்து, நாசமானது. திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்தின் போது, தீபம் ஏற்றப்படும் மலையை, பக்தர்கள் வணங்கி வருகின்றனர். லிங்கமே மலையாக அமைந்த மலை. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் தலம். பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற இத்தலத்தில் மாதந்தோறும், பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள், மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர். 2,668 அடி உயரம் கொண்ட, இந்த மலையின் மொத்த பரப்பளவு, 718 ஏக்கர்.
மூலிகை செடிகள்: இந்த மலையில், சந்தனம், கடுக்கன், தான்றிக்காய், அகில், நிலவேம்பு என, ஏராளமான மூலிகை செடிகளும், அரிய வகை மரங்களும் உள்ளன. மேலும், நீலமுக செண்பகம், கருங்கலை போன்ற அரிய வகை பறவைகளும், சிங்கவால் குரங்கு, புள்ளிமான், முள்ளம்பன்றி, எறும்புத்தின்னி போன்ற விலங்குகளும் வாழ்கின்றன.
இடியுடன் மழை: இந்நிலையில், திருவண்ணாமலை பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி அளவில், திடீரென இடியுடன் கூடிய, லேசான மழை பெய்தது.அப்போது, மலை மீது, இடி விழுந்தது. இதில், மலையில் இருந்த மரங்கள், தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து, தகவல் அறிந்த, வன துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து, நள்ளிரவு, 1:00 மணி அளவில், போராடி தீயை அணைத்தனர்.