உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறநிலைய துறையிடம் வருகிறது மணப்பாக்கம் பெருமாள் கோவில்!

அறநிலைய துறையிடம் வருகிறது மணப்பாக்கம் பெருமாள் கோவில்!

சென்னை: மணப்பாக்கத்தில், தனியார் அறக்கட்டளை நிர்வகித்து வரும், கரியமாணிக்க பெருமாள் கோவிலை, இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. போரூர் அருகே, மணப்பாக்கம், தர்மராஜபுரத்தில் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி, மகாலட்சுமி, கருடாழ்வார் ஆகிய விக்கிரகங்கள் மட்டும் கோவிலில் உள்ளன. கோவில், சோழமன்னர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மணப்பாக்கம் பகுதிவாசிகள் அந்த கோவிலில் வழிபட்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக கோவில் பராமரிப்பு இல்லாததால் பூஜை நடைபெறவில்லை. கோவிலை சுற்றி, 50 சென்டுக்கு மேல் காலி இடம் உள்ளது. கரியமாணிக்க பெருமாள் தேவஸ்தானம் அறக்கட்டளை நிர்வாகிகள் கோவிலை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவில் அருகில் உள்ள காலி இடத்தில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு புதிய கோவில், 2008ம் ஆண்டு முதல் கட்டப்பட்டு, பணி முடியும் தருவாயில் உள்ளது.

பழைய கோவிலில் உள்ள விக்கிரகங்களுடன், ஆண்டாள், நரசிம்மர், ஹயக்கிரீவர், தும்பிக்கையாழ்வார் மற்றும் 27 அடி உயர ஆஞ்சநேயர் ஆகிய விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அடுத்த மாதம் 16ம் தேதி, சம்பரோட்சணமும் நடக்க உள்ளது. இதற்கிடையே, கடந்த 14ம் தேதி, பழைய கோவிலை அறக்கட்டளை இடித்துள்ளது. தகவல் அறிந்த இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், சோழமன்னர் காலத்து கோவிலை இடித்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து, கோவில் தர்மகர்த்தா சரவணன் கூறியதாவது: பழைய கோவில், கட்டப்பட்டு 160 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. பல ஆண்டுகளாக, பாழடைந்ததால், இப்போது புதிய கோவில் கட்டி உள்ளோம். பாழடைந்து இருந்தபோது கண்டு கொள்ளாத அறநிலைய துறை கோவில் புதுப்பிக்கும்போது வருவது எந்த விதத்தில் நியாயம்? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். இந்து சமய அறநிலைய துறை காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழமை வாய்ந்த கோவிலை இடித்தது, அதில் உள்ள விக்கிரகங்களை எங்கள் கவனத்திற்கு கொண்டு வராமல் இடம் மாற்றியது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அந்த கோவிலை அறநிலைய துறையின் கீழ் கொண்டு வர உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !