உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில் மண்டப சுவர் இடிந்து விழுந்தது!

சிவன் கோயில் மண்டப சுவர் இடிந்து விழுந்தது!

காரைக்குடி: கோயில் மண்டபத்தின், கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து, 4 பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். 2 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காரைக்குடி சிவன்கோயில் வீதியில், உள்ள சிவன் கோயிலில், 42 அடி அகலம், 48 அடி நீளத்திற்கு, முன் மண்டபம் கட்டும் பணி, கடந்த 4 மாதங்களாக நடந்து வருகிறது. கடந்த மே 21ல், கான்கிரீட் போடப்பட்ட நிலையில், நேற்று மேல் மட்டத்தில், பீம் அமைக்கும் பணி நடந்தது. 15க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.மதியம் 2:30 மணிக்கு, மண்டபத்தின் மேற்கூரை பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது. மண்டபத்தின் மேல், கட்டட பணியில் இருந்த அரியக்குடி சிட்டாள்,42, மணச்சை கண்ணன்,42, கோட்டையூர் உமையாள்,45, பெரியகோட்டை நாகராஜ்,35, அழகாபுரி கலா,34, கோட்டையூர் ராக்கு,35, எஸ்.கணேசன்,32, புதுவயல் பி.பழனியப்பன்,43 காயமடைந்தனர். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான வீரர்கள், காயமடைந்தவர்களை தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எஸ்.கணேசனின் விலா எலும்பில், கட்டை குத்தியதாலும், பி.கணேசனுக்கு நெற்றியில் அடிபட்டதாலும், அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.காரைக்குடி தெற்கு போலீசார் இன்ஜினியரிங் சூப்பர்வைசர் சரவணனிடம், பிளான் போட்டு கொடுத்தது யார்? எதற்காக அவசர கோலத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது, என விசாரிக்கின்றனர்.விபத்து நடந்த நேரம் மதியம் 2:30 மணி என்பதால், கோயில் நடை மூடப்பட்டிருந்தது. இதனால், உயிர் சேதம் இல்லை. கடந்த 2 நாளுக்கு முன்பு தான், மேற்கூரை கான்கிரீட் போடப்பட்டுள்ளது. அதன் ஈரம் காய்வதற்குள் பீம் அமைக்கும் வேலையை ஆரம்பித்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, என காயமடைந்தவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !