உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாம்பே ஞானம் குழுவினரின் பக்தி நாடகம்!

பாம்பே ஞானம் குழுவினரின் பக்தி நாடகம்!

கோவை: கோவையில், மகாலட்சுமி பெண்கள் நாடக குழு சார்பில் ‘ஸ்ரீ பகவான்  நாம போதேந்திராள்  என்ற பக்தி நாடகம் நேற்று ஆர்.எஸ்,புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. போதேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை, இரண்டு மணி நேரத்தில் விளக்கும் வகையில், ரத்தின சுருக்கமாக அமைக்கப்பட்டது, இந்த நாடகம். தெளிவான ஒளி, ஒலி மற்றும் அரங்க  அமைப்புடன் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் நடித்துள்ள அனைவரும் பெண்கள்.  நாடக இயக்குனர் பாம்பே ஞானம் கூறியதாவது: இன்றைக்கு நகைச்சுவையை மையமாக வைத்து தான் அதிகம்  நாடகங்கள் நடத்தப்படுகின்றன. சமூக பிரச்னைகளை குறித்த நாடகங்களும் நடத்தப்படுகின்றன. மக்களின் மனதில் பக்தியை வளர்க்க கூடிய நாடகங்கள் யாரும் நடத்துவதில்லை. இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு பக்தி உணர்வும், கடவுள் நம்பிக்கையும் தேவை. பகவான் மனித ரூபத்தில் பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்.  அப்படி அவதரித்தவர்கள் தான் காமகோடி பீட ஆச்சாரியார்கள். ஆன்மீகத்தை, தெய்வ  நம்பிக்கையையும் மக்களுக்கு போதித்து நல்வழிப்படுத்தவே இந்த மகான்கள் உலகத்தில்  அவதரித்தனர்.  அவர்களில் ஒருவர்தான் பகவான் போதேந்திரர். அப்படிப்பட்ட மகானின்  வாழ்க்கை வரலாற்றை நடகமாக நடத்தி வருகிறேன். இவரை 19 இடங்களில் இந்நாடகம் நடத்தப்பட்டுள்ளது. நடத்திய இடங்களில் எல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாடகத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு செல்லும் பார்வையாளர்கள் ராம நாமத்தை உச்சரித்து கொண்டே வீட்டுக்கு செல்கின்றனர். இது தான் இந்நாடகத்தின் வெற்றியாகும். இவ்வாறு ஞானம் கூறினார். இந்நாடகம் இன்று மாலை 4.00 மணி மற்றும்  இரவு 7.00 மணி என, இரண்டு காட்சிகள் நடக்கிறது. அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !