உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 4 ஆண்டுகளாகியும் கட்டப்படாத காளஹஸ்தி ராஜகோபுரம்!

4 ஆண்டுகளாகியும் கட்டப்படாத காளஹஸ்தி ராஜகோபுரம்!

காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோவிலில், ராஜகோபுரம் இடிந்து விழுந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுவரை கோபுரம் எழுப்பும் பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால், பக்தர்கள் மிகவும் மனவருத்தத்தில் உள்ளனர். காளஹஸ்தி சிவன் கோவில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் முதலிகளால் பாடல் பெற்ற தலம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த அந்த தலத்தில், கி.பி., 1516ம் ஆண்டு, கஜபதி ராஜாக்களை வீழ்த்தியதன் நினைவாக, கிருஷ்ண தேவராயரால், 136 அடி உயரத்தில், ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டது. மாநில அறநிலைய துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், ராஜகோபுரம் முறையாக பராமரிக்கப்படவில்லை. அதையடுத்து, 2010ம் ஆண்டு, மே 26ம் தேதி இரவு, ராஜகோபுரம் இடிந்து விழுந்தது. அந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஆந்திராவின் அப்போதைய முதல்வராக இருந்த ரோசய்யா, ராஜகோபுரத்தை மீண்டும் கட்ட அடிக்கல் நாட்டினார். நெல்லூரை சேர்ந்த நவயுகா நிறுவனம், 4.5 கோடி ரூபாய் நன்கொடை அளிக்க முன் வந்தும், அறநிலைய துறை அதை ஏற்கவில்லை. தொடர்ந்து, கோபுரத்திற்கான பெரிய கற்களை, குண்டூரில் இருந்து கொண்டு வருவதில் சிரமம் இருந்ததால், ராஜகோபுர பணி கிடப்பில் போடப்பட்டது. விரைவில், ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !