உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா!

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா!

கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா, நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 11ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. 16ம் தேதி பூச்சொரிதல் விழா, 18ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து, நாள்தோறும் காலையில் பல்லக் கிலும், மாலையில் ரிஷபம், புலி, பூதம், சிம்மம், அன்னம், யானை, குதிரை, காமதேனு, கஜலட்சுமி வாகனங்களில், ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. கடந்த, 25ம் தேதி எதிர்காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து, கடந்த, மூன்று நாட்களாக காலை, 7 மணி முதல் இரவு வரை தேரோட்டம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், கரும்பு தொட்டிலில் குழந்தையை எடுத்து வருதல், மாவிளக்கு ஊர்வலம் என பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் விழா, நேற்று மாலை, 5.15 மணிக்கு நடந்தது. கோவில் பூசாரி, கோவிலில் இருந்து கம்பத்தை எடுத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நிறுத்தினார். கம்பம் ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. கோவிலில் இருந்து சிறிது தூரம் கம்பம் சென்றவுடன், இடியுடன் கூடிய மழை பெய்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர். கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழாவையொட்டி, அமராவதி ஆற்றில் இரவு வாண வேடிக்கை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வாண வேடிக்கையை கண்டு களித்தனர். கம்பம் விடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, 100 க்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று புஷ்ப வாகனம், நாளை கருட வாகனம், 31ம் தேதி மயில் வாகனம், 1ம் தேதி கிளி வாகனம், இரண்டாம் தேதி வேப்பமர வாகனம், மூன்றாம் தேதி பின்னமர வாகனத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். நான்காம் தேதி புஷ்ப அலங்காரம், ஐந்தாம் தேதி பஞ்ச பிரகாரம், ஆறாம் தேதி புஷ்ப பல்லக்கு, ஏழாம் தேதி ஊஞ்சல், எட்டாம் தேதி அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !