மொரட்டாண்டி சனீஸ்வரன் கோவிலில் 13ம் தேதி குரு பெயர்ச்சி யாகம்!
புதுச்சேரி: மொரட்டாண்டி, சனீஸ்வர பகவான் கோவிலில், வரும் 13ம் தேதி குரு பெயர்ச்சி மகா யாகம் நடக்கிறது. புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உலகிலேயே மிக உயரமான 12 அடி விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு மகா யாகம், லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி, வரும் 13ம் தேதி காலை 9.00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. அன்று மாலை 6.18 மணிக்கு குரு சாந்திஹோமம், நவக்கிரக சாந்திஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சணாமூர்த்தி ஹோமம், ராசி பரிகார ஹோமம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக 1008 லிட்டர் பால் அபிஷேகமும், கலச அபிஷேகமும், 1008 கிலோ சுண்டல் நிவேதனமும் நடக்கிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, கடந்த 1ம் தேதி முதல் வரும் 12ம் தேதி வரை தினமும் லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, லலிதாம்பிகை வேத சிவகாம டிரஸ்ட் நிறுவனர்கள் சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.