உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் ரசாயனம் கலக்காத இயற்கை காய்கறி தோட்டம்

கோவிலில் ரசாயனம் கலக்காத இயற்கை காய்கறி தோட்டம்

அன்னுார் : மொண்டிபாளையம் பெருமாள் கோவில் காய்கறி தோட்டத்தில் இயற்கை முறை விவசாயத்தில், அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. அன்னுார் அருகே ’மேலைத்திருப்பதி’ என்றழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 50 பேருக்கும், சனி, ஞாயிறுகளில் 100 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. நித்திய அன்னதான திட்டத்திற்கு தேவைப்படும் காய்கறிகளை, இடவசதியுள்ள கோவில்களில் தோட்டம் அமைத்து விளைவிக்க வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து மொண்டிபாளையத்தில் கோவில் அருகில் ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் 40 சென்ட் காலி இடத்தில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. பகுதி நேர பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தக்காளி, கீரை, வெண்டை, பாகற்காய், அவரை, தட்டை, முருங்கை, பூசணி, சுரைக்காய், கருவேப்பிலை ஆகியவை பயிரிடப்பட்டன. இவை அனைத்தும் இப்போது பயன் தரத்துவங்கியுள்ளன. அன்னதான திட்டத்திற்கு தேவையான காய்கறிகள் முழுக்க இப்போது இங்கிருந்து தரப்படுகிறது. கோவில் செயல் அலுவலர், பெரிய மருதுபாண்டியன் கூறுகையில், “இந்த தோட்டத்தில் ஒரு துளி கூட ரசாயன உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ பயன்படுத்தவில்லை. வேப்பம்புண்ணாக்கு, மண் புழு உரம், சாணம் ஆகியவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்கிறோம். வழக்கமான காய்களை விட கூடுதல் சுவை கிடைக்கிறது. அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. இப்போது ஒரு ரூபாய்க்கு கூட வெளியிலிருந்து காய்கறி வாங்குவதில்லை. இயற்கை முறையில் விளைந்த காய்கறியை உணவுக்கு பயன்படுத்துவதால், அன்னதானத்திற்கு வரவேற்பும் அதிகரித்துள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !