கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா துவங்கியது!
கடலூர்: கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலமான பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி கடந்த 27ம் தேதி இரவு எல்லை கட்டு உற்சவமும், மறுநாள் அமர்ந்தவாழியம்மன் கோவிலில் கொடியேற்றி சிறப்பு பூஜை நடந்தது. இரவு கொடியிறக்கம் செய்து, இரவு 11:00 மணிக்கு பிடாரி அம்மன் கோவிலில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தினசரி வண்ணார மாரியம்மன், பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புற்று மண் எடுத்தல், விநாயகர் வீதியுலா நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திக் வீதியுலாவும், இரவு 8:30 மணிக்கு இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. இன்று சிம்ம வாகனத்திலும், 6ம் தேதி பூத வாகனத்திலும், 7ம் தேதி நாக வாகனத்திலும், 8ம் தேதி தெருவடைச்சானும், 9ம் தேதி வெள்ளிரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. வரும் 10ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், 11ம் தேதி தங்க கைலாய வாகனத்திலும், 12ம் தேதி காலை 8:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவமும், 13ம் தேதி முத்துப்பல்லக்கிலும், 14ம் தேதி ரிஷப வாகனத்தில் வீதியுலாவும், திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் உற்சவமும் நடக்கிறது. மறுநாள் 15ம் தேதி இரவு தெப்பல் உற்சவமும், 16ம் தேதி காலை சண்டேசுவரர் வீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.