உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யானைமலை சமணர் குகைக்கோயில் அழிகிறது: குடிமகன்களின் புகலிடமாக மாறியது!

யானைமலை சமணர் குகைக்கோயில் அழிகிறது: குடிமகன்களின் புகலிடமாக மாறியது!

ஒத்தக்கடை : மதுரை ஒத்தக்கடை யானைமலையில் உள்ள தேசிய புராதன சின்னமான சமணர் குகை கோயில் குடிமகன்கள் கொட்டமடிக்கும் புகலிடமாக மாறியுள்ளது. இங்கு நடக்கும் அவலங்களை பார்த்து சுற்றுலா பயணிகள் வேதனையடைகின்றனர். அழிவின் பிடியில் உள்ள குகை கோயிலை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

ஒத்தக்கடை நரசிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் யானை மலையில் கி.பி., 9ம் நுாற்றாண்டை சேர்ந்த சமணர் குகை கோயில் மற்றும் கல்படுகைகள் உள்ளன. இங்குள்ள சிற்பங்களில் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா, இயக்கி உள்ளிட்ட அரிதான சிற்பங்கள் காணப்படுகின்றன. ’அச்சணந்தி’ என்னும் சமணத் துறவிகள் முயற்சியால் உருவாக்கப்பட்ட குகை கோயில் மற்றும் சிற்பங்களில் சுதை பூசி வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. குகைக்குள் ’தமிழ் கிரந்தன்’ எனும் வட்டெழுத்து கல்வெட்டுக்களும் உள்ளன. காலத்தால் அழியாத இந்த அரிய பொக்கிஷங்களை தேசிய புராதன சின்னமாக மத்திய அரசு அறிவித்து, தமிழ்நாடு தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. சமணர்களின் வாழ்க்கை தத்துவத்தை விளக்கும் இக்குகை கோயிலை காணவும், ஆய்வுக்காகவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பலர் வருகை தருகின்றனர். குகைக்குள் செல்லும் வழித்தடம் கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டது.

தற்போது கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். குகைக்குள் ’குளுகுளு’ தட்பவெப்ப நிலை நிலவுவதால் குடிமகன்கள் குடித்து விட்டு கொட்டமடிக்கும் ’பார்’ போல் மாற்றியுள்ளனர். வழிநெடுகிலும் ’அசிங்கம்’ செய்துள்ளனர். கல்வெட்டுக்களில் காமம் கலந்த காதல் வரிகளை சிலர் செதுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இவர்களின் கைங்கரியத்தால் சுற்றலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் வருகை குறைந்துள்ளது. தேசிய புராதன சின்னங்களை சேதப்படுத்துவோர், அழிப்போர் மீது தொல்லியல்துறை பாதுகாப்பு சட்டம் 1966ன் கீழ் அபராதம், சிறை தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பலகையையே திருடர்கள் ’லபக்’ செய்யும் சூழல் உருவாகி உள்ளது. பாதுகாக்கப்பட்ட தேசிய சின்னங்களை அவமதிக்கும், அழிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பராமரிப்பு பணிகளை மேற்கொண்டும், வாட்ச்மேன்களை அமர்த்தியும் சமணர் குகைக்கோயிலை பாதுகாக்க வேண்டும், என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !