சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை!
அழகர்கோவில்:அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. இக்கோயிலில் சஷ்டி மண்டபம், கண்ணாடியிலான வாகனங்கள் மண்டபம், பக்தர்கள் தங்கி செல்ல திறந்த வெளிக் கூடம், மடப்பள்ளி, கருவறை புதுப்பித்தல், புதிய செம்பு கொடிமரம் அமைத்தல் என பல்வேறு பணிகள் ரூ.5 கோடியில் நடந்துள்ளன.கருவறை புதுப்பிப்பதற்காக மூலவர் சுவாமிகள் தற்காலிக கருவறை மண்டபத்தில் எழுந்தருள செய்துள்ளனர். கிரானைட் கருங்கற்களால் கருவறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து, ஜூன் 2ல் பூர்வாங்க பூஜை நடந்தது. ஜூன் 4ல் தற்காலிக கருவறையில் இருந்த மூலவர் சுவாமிகள் கருவறைக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.நேற்று காலை விக்னேஸ்வர, கோ, கஜ பூஜை நடந்தது. மாலை 5.30 மணிக்கு ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேகம், பூர்ணாஹுதியுடன் முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது.ஜூன் 8ம் தேதி காலை 8 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.