உத்தமர் கோவிலில் குருபெயர்ச்சி விழா
மண்ணச்சநல்லூர்: திருச்சியை அடுத்த, உத்தமர் கோவில் மும்மூர்த்திகள் தலம் எனப்படும் சப்தகுரு ஸ்தானத்தில், வரும், 12, 13ம் தேதிகளில், குருபெயர்ச்சி விழா நடக்கிறது. உத்தமர் கோவிலில், தேவதரு (பிரஹஸ்பதி), அசுரகுரு (சுக்கிரன்), ஞானகுரு (சுப்ரமணியர்), பரப்பிம்மகுரு (பிரம்மதேவர்), விஷ்ணு குரு (வரதராஜ பெருமாள்), சக்திகுரு (சவுந்தர்யபார்வதி), சிவகுரு (சிவபெருமான்) தட்சிணாமூர்த்தி ஆகிய சப்த குருக்கள் அமைந்துள்ளதால், சிறப்பு பெற்ற தலமாக விளங்குகிறது. தவிர, சரஸ்வதியும் கோவிலில் வீற்றுள்ளார். ஜூன், 13ம் தேதி மாலை, குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள் குரப்ரீதி பரிகாரம் செய்து கொள்வது நல்லது. குருபெயர்ச்சியை முன்னிட்டு, 12ம் தேதி மாலை, 6 மணி முதல், 8 மணி வரையிலும்,பரிகார ஹோமங்கள் நடக்கின்றன. மறுநாள், 13ம் தேதி மாலை, 4.30 மணி முதல், குரு- தட்சிணாமூர்த்தி, பிரம்மா சன்னதியில் விசேஷ அபிஷேக ஆராதனை மற்றும் குருப்ரீதி அர்ச்சனை நடைபெறும். குருபெயர்ச்சி ஹோமம், பரிகார அர்ச்சனையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், உரிய கட்டணத்தை செலுத்தி பதிவுசெய்து கொள்ளும்படி, கோவில் நிர்வாக அதிகாரி பாரதிராஜா தெரிவித்துள்ளார்.