கோயில் பாக்கியை வசூலிக்க முடிவு: அறநிலையத்துறை அமைச்சர் தகவல்!
திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கோயில்களுக்கு குத்தகை பாக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வரும் சட்டசபை கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படுகிறது என அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். நெல்லையப்பர் கோயிலில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் கூறியதாவது: நெல்லையப்பர் கோயிலில் கடந்த 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2016ல் கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும். அதற்கான பணிகள் விரைவில் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் குத்தகை பாக்கி 5.5 கோடி உள்ளது. பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை அறிவிப்பு பலகையில் வைத்ததன் மூலம், தற்போது இரண்டு கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது போல தமிழகம் முழுவதும் அனைத்து அறநிலையத்துறை கோயில்களுக்கும் தரவேண்டிய குத்தகை பாக்கியை அதிரடியாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்றார்.