ராம சகோதரர்களை போல் வாழ வேண்டும்: கம்பராமாயண சொற்பொழிவில் தகவல்!
கோவை : ராமர், லட்சுமணர், பரதன், சத்ருக்கனை போல் நாமும் ஒற்றுமையாக வாழ்ந்தால், சமுதாயத்தில் நாம் அனைவரோடும் சகோதரர்களாக வாழலாம் என்று, கம்பராமாயண சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் பேசினார். கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், கம்பராமாயண சொற்பொழிவு ஐந்தாவது நாளாக நேற்று நடந்தது. இதில், திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: கைகேயி ராமனை அழைத்து, இவ்வுலகை பரதனே ஆள வேண்டும். நீ ஜடாமுடி தரித்து, காவி உடையணிந்து, 14 ஆண்டுகள் கானகம் செல்ல வேண்டும். இது அரச கட்டளை என்றார். தசரதன் ராமனை அழைத்து, நாளை உனக்கு பட்டாபிஷேகம் என்று சொன்னபோது, ராமன் சந்தோஷமடையவில்லை. கைகேயியை அழைத்து, பரதனுக்கு பட்டாபிஷேகம் என்று சொன்ன போதும், வருத்தப்படவில்லை. இன்பம் வரும்போது சந்தோஷப்படுவதும், துன்பம் வரும்போது வருத்தப்படுவதும் தவறு என்று பகவத்கீதையில் சொல்வதற்கு முன்னால், ராமன் வாழ்ந்து காட்டினார். சுமித்திரை லட்சுமணனை பார்த்து, ராமன்பின் செல், இனி ராமன் தான் உனக்கு தந்தை. சீதை தான் தாய். அவர்கள் இருவர் இருக்கும் இடம் தான் அயோத்தி. ராமன் பின் தொண்டனாக செல்ல வேண்டும்; தம்பியாக அல்ல. நாளை ராமன் நாட்டிற்கு வந்தால், அவன் உயிருக்கு ஆபத்து வந்தால், அவனுக்கு முன்னால் நீ உயிரை விடு என்று மகனுக்கு அறிவுரை கூறினார். அதேபோல், வாழ்ந்து காட்டினார் லட்சுமணன். கங்கை கரையில் குகன் என்ற வேடன், ராமனை உபசரித்தான். அவனை அங்கேயே இருக்கச்சொன்ன ராமன், 14 ஆண்டுகள் கழித்து வருகிறேன் என்று சொல்லி, நீ எனக்கு சகோதரன். நாம் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்றார். ராமர், லட்சுமணர், பரதன், சத்ருக்கனை போல் நாமும் ஒற்றுமையாக வாழ்ந்தால், சமுதாயத்தில் நாம் அனைவரோடும் சகோதரர்களாக வாழலாம் இவ்வாறு, சொற்பொழிவாளர் கல்யாணராமன் பேசினார்.