உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை காவல் தெய்வமான கோனியம்மனுக்கு விரைவில் குடமுழுக்கு!

கோவை காவல் தெய்வமான கோனியம்மனுக்கு விரைவில் குடமுழுக்கு!

கோவை : கோவையின், காவல் தெய்வமான கோனியம்மனுக்கு விரைவில் குடமுழுக்கு விழா நடத்தப்படுகிறது. கட்டட, கட்டுமானம், வர்ணம்பூசுதல் உள்ளிட்ட அனைத்துப்பணிகளும் நிறைவடைந்து, குடமுழுக்குவிழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. கோனியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல், 2007 அக்., 17ல் நாட்டப்பட்டது. மண் ஆய்வு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடந்தன. ஏழு ஆண்டுகளுக்குப்பின் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோவில் முகப்பில் ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்பது கோபுர கலசங்கள் அமைக்கப்பட உள்ளன. தரை மட்டத்திலிருந்து 93 அடி உயரத்துக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இதில் 14 வரிசைகளில் 27 அடி உயரத்துக்கு கல்காரத்திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு மேல் 66 அடி உயரத்துக்கு, சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஜகோபுர திருப்பணிக்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இவையனைத்தும் பக்தர்கள் உபயமாக கொடுத்த தொகையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. கோனியம்மன் கோவில், ராஜகோபுரப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன. அதனால் குடமுழுக்குப் பணிகள் தள்ளிவைக்கப்பட்டன. விதிமுறைகள் விலக்கிய சூழலில், அரசின் அனுமதிக்காக, அமைச்சர்களின் தேதிக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இருப்பினும் கோவில் நிர்வாகம் கோபுரத்தை சுற்றியிருந்த தடுப்புகளை அகற்றியும், கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. குடமுழுக்கு விழாவுக்கு பின், கோனியம்மன் கோவில் ராஜகோபுரம் கோவையின் அடையாள சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !