திருநள்ளாரில் பிரம்மோற்சவம் பரி வேட்டை நிகழ்ச்சி!
காரைக்கால்: திருநள்ளார் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று பரி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக் கிறார். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. 27ம் தேதி வரை விநாயகர் உற்சவம், 30ம் தேதி வரை சுப்ரமணியர் உற்சவம், 1ம் தேதி அடியார்க்கு நால்வர் ஊர்வலம், 3ம் தேதி செண்பக தியாராஜர் எழுந்தருளல், 6ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. அதைத்தொடர்ந்து தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு சனீஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார். நேற்று குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி முருகப் பெருமாள் பரி வேட்டைக்கு பூமங்கலம் கிராமத்திற்கு எழுந்தருளினார். முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.