வீரராகவர் கோவில் குளத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பு
திருவள்ளூர் ;வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில், தற்காலிகமாக தண்ணீர் நிரப்புவதற்காக, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து வருகிறது.திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அமாவாசை தினங்களில், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள், இங்கு வந்து, தங்கள் முன்னோர்களுக்கு, திதி கொடுத்துச் செல்வர். பரந்து விரிந்த குளத்தில், நீர்வரும் வழிகள் தூர்ந்து போனதால், குளத்திற்குள், சிறிய அளவில் பள்ளம் வெட்டி, அதில் தண்ணீர் தேக்கி வைத்திருந்தனர்.இந்த நிலையில், பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, கடந்த மார்ச் 21ம் தேதி, சீரமைப்பு பணிகள் துவங்கின. கோடை காலமான தற்போது, குளம் வறண்டு விட்டது.இதையடுத்து, தற்காலிகமாக தண்ணீர் நிரப்ப, கோவில் நிர்வாகம், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.இதுகுறித்து, கோவில் கவுரவ ஏஜன்ட் சம்பத் கூறுகையில், ”குளத்தில், தற்காலிகமாக தண்ணீர் நிரப்ப, ஆறு இடங்களில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவற்றின் மூலம் தண்ணீர் பெறப்பட்டு, கோவில் குளம் நிரப்பப்படும். மழைக்காலத்தில் இந்த குழாய்கள் இருக்கும் இடம் குறிக்கப்பட்டு, சீல் வைக்கப்படும். தேவைப்படும் போது, மீண்டும் இக்குழாய்களில் இருந்து தண்ணீர் பெறப்படும்,” என்றார்.