33 அடி உயர புதிய கொடிமரம் சென்னிமலையில் பிரதிஷ்டை!
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணியஸ்வாமி கோவிலில், துவஜஸ்தம்பம் என்ற கொடிமரங்கள் பிரதிஷ்டை, நேற்று நடந்தது.சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா, பங்குனி உத்திர திருவிழா ஆகிய காலங்களில், முருகன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில், சேவற்கொடியும், மார்கண்டேயர் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில், நந்தி கொடியும் ஏற்றுவது மரபு. இக்கொடியேற்றும் உரிமை, சென்னிமலை பகுதி வாழ் இசை வேளாளர்கள் அனைவோர் மடம் சார்பில் நடப்பது வழக்கம். இசைவேளாளர்கள் சமூகத்தினர் சார்பில், 33 அடி உயரத்தில், வேங்கை மரத்தாலான புதிய கொடி மரம் வடிவமைத்தனர். இதற்கான பிரதிஷ்டை, நேற்று காலை, 10.30 மணிக்கு, சென்னிமலை, மலை மேல் உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் சன்னதி முன்பும், மார்கண்டேஸ்வரர் கோவில் சன்னதிமுன்பும், ஆகம விதிப்படி, துவஜஸ்தம்பம் என்ற கொடிமரங்கள் பிரதிஷ்டை நடந்தது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், கலெக்டர் சண்முகம், எம்.எல்.ஏ.,க்கள் நடராஜ், கிட்டுசாமி, மாவட்ட பஞ்., துணை தலைவர் மணிமேகலை, மாவட்ட கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், யூனியன் தலைவர் கருப்புசாமி, துணை தலைவர் துரைசாமி, டவுன் பஞ்., தலைவர் சண்முகசுந்தரம், நான்கு நாட்டு கவுன்டர்கள், ஈங்கூர் தலைவர் பாலசுப்பிரமணியம், வரப்பாளையம் பெரியசாமி, பெருந்துறை நில வள வங்கி தலைவர் சின்னகண்ணு என்ற சேனாதிபதி, சென்னியங்கிரி வலசு தொடக்க வங்கி தலைவர் சிவசுப்பிரமணியம், மெட்றோ டெக்ஸ் தலைவர் கந்தசாமி, சிரகிரி டெக்ஸ் தலைவர் தம்பித்துரை, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சேமலையப்பன், சுவாமி டெக்ஸ் தலைவர் மாரப்பன், காந்திஜி டெக்ஸ் தலைவர் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பசவராஜன், தலைமை எழுத்தர் ராஜீ, பாலசுப்பிரமணியம், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் இசைவேளாளர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.கொடி மரம் குறித்து ஸ்தபதி குப்புசாமி கூறியதாவது: இக்கொடிமரம், 33 அடி உயரம் கொண்ட, ஒரே வேங்கை மரத்தால் செய்யப்பட்டது. இம்மரம், கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டது. இது போன்று மரங்கள் கிடைப்பது மிக அரிது. கொடிமரத்தை நேர் நிறுத்தி, பீட வேலைகள் முடிந்த பின், மேல் இருந்து, காப்பர் தகுடு பொறுத்தி, அதில் வரகு அரிசி நிரப்பப்படும். இப்பணிகள் இன்னும், 15 நாளில் நிறைவடையும். இதற்கான செலவு, 11 லட்சமாகும். தவிர, மார்க்கண்டேஸ்வரர் சன்னதி முன், தேக்கு மரத்தில், காப்பர் தகடு பொறுத்தி, 11.5 அடி உயரத்தில், கொடிமரம் நிறுவப்படுகிறது. இதற்கு, 2.50 லட்சம் செலவாகிறது, என்றார்.