திருப்பணியை துவக்காவிட்டால் உண்ணாவிரதம்: எம்.எல்.ஏ., எச்சரிக்கை!
புதுச்சேரி: வரதராஜப் பெருமாள், வேதபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகளை உடனடியாக துவக்காவிட்டால், பக்தர்களுடன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., எச்சரித்துள்ளார். புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள, வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு, 1998ம் ஆண்டு, ஜூலை 26ம் தேதியிலும், வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு, 1999ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதியிலும் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததால், திருப்பணிகளை துவக்க முடிவு செய்யப்பட்டது. வேதபுரீஸ்வரர் கோவிலில், 2012ம் ஆண்டு, அக்டோபர் 29ம் தேதி பாலாயணம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, வரதராஜப் பெருமாள் கோவிலிலும் பாலாயண பூஜை செய்யப்பட்டது. பாலாயணம் நடந்து, 19 மாதங்களுக்கு மேலாகியும், இரு கோவில்களிலும் திருப்பணி வேலைகள் இதுவரை துவக்கப்படவில்லை. மூலவரை தவிர்த்து, பெரும்பாலான விக்ரகங்கள் துணியால் மூடப்பட்டு, பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளது. பிரம்மோற்சவம் உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் தடைபட்டுள்ளது.திருப்பணிகளை துவக்காமல், அரசு மிகுந்த அலட்சியம் காட்டுவதால், பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன், இந்து அறநிலையத் துறை ஆணையருக்கு காரசாரமான கடிதம் அனுப்பி உள்ளார். வரதராஜப் பெருமாள், வேதபுரீஸ்வரர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகளை, இரண்டு நாட்களுக்குள் துவக்காவிட்டால், பக்தர்களுடன் கோவில் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என, லட்சுமிநாராயணன் எச்சரித்துள்ளார்.