சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள்!
பள்ளிப்பட்டு : ஆவணி சதுர்த்தியில் கொண்டாடுவதற்காக, விநாயகர் சிலைகள் தயாரிப்பில், கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காகிதம் மற்றும் குச்சி உள்ளிட்ட பொருட்களை கொண்டு, ’விஸ்வரூப’ விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.ஆவணி சதுர்த்தி திதியில், வரும் ஆக., 29ல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான சிலைகள் தயாரிப்பு, தற்போதே தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாரம்பரியமாக செய்யப்படும் களிமண் சிலைகள், பெரிய அளவில் செய்யப்படுவதில்லை.சீன களிமண், காகிதம், குச்சி உள்ளிட்ட பொருட்களை கொண்டு பெரிய அளவில் செய்யப்படும் விநாயகர் சிலைகள், அதிகளவில் விற்பனையாகின்றன. இதை இலக்காக கொண்டு, விழுப்புரத்தை சேர்ந்த சிலை செய்யும் கலைஞர்கள், 10 பேர், பள்ளிப்பட்டில் முகாம் அமைத்து, சிலைகளை தயாரித்து வருகின்றனர்.தற்போது, காகித அட்டைகளில், சீன களிமண் கொண்டு விநாயகர் உருவத்தை வடிவமைத்து வருகின்றனர். இவை நன்கு காய்ந்ததும், அதற்கு வண்ணம் தீட்டும் பணி துவங்கும். இங்கு, 1,000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்ட சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து, சிலை செய்யும் நாராயணன் கூறுகையில், ’சிலைகள் அதிக எடை இல்லாதபடியும், உறுதியாகவும் இருக்க வேண்டும். இதற்கு, உள்ளீடற்ற சிலைகளின் உட்புறத்தில் உறுதியான குச்சிகளை பயன்படுத்துகிறோம். சூற்றுச்சூழலை பாதிக்காத வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன’ என்றார்.