நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன ஒருங்கிணைப்பு கூட்டம்!
சிதம்பரம்: நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனம் ஒருங்கிணைப்புக் கூட்டம் எந்த முடிவும் தீர்க்கமாக எடுக்கப்படாமல் சம்பிரதாயத்திற்காக நடந்து முடிந்தது.சிதம்பரம், நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம் மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வரும் 3ம் தேதி தேரோட்டமும், 4ம் தேதி தரிசனமும் நடக்கிறது.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இதனையொட்டி நிர்வாகம் செய்யவேண்டிய பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.சப் கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தாசில்தார் விஜயா, டி.எஸ்.பி., ராஜாராம், மின் வாரிய உதவி இயக்குனர் மாலதி, உதவி இன்ஜினியர் நடராஜன், பொதுப்பணித் துறை உதவி இன்ஜினியர் வைத்தியநாதன், நெடுஞ்சாலைத் துறை உதவி இன்ஜினியர் விக்னேஷ்வரன், வெங்கடேசன், நகராட்சி மேலாளர் ராமஜெயம், இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், அகஸ்டின் யோஸ்வா லாமேக், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் பத்மநாபன், தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ஜகாங்கீர் முகமது மற்றும் சபாநாயகர், பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலர் பாஸ்கர், கவுன்சிலர் நடனசபாபதி, சங்கர் தீட்சிதர் , இந்து ஆலய பாதுகாப்புக் குழு செங்குட்டுவன், இன்ஜினியர் சந்திரசேகர், குருவாயூரப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கோவில் உள்ளே பக்தர்கள் வசதிக்காக தடுப்புக் கட்டைகள் அமைக்க வேண்டும். நான்கு கோபுரம், தரிசனம் நடக்கும் இடத்தில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். பக்தர்களுக்கு மொபைல் கழிவறை ஏற்படுத்த வேண்டும் என சப் கலெக்டர் அரவிந்த், தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டார். இந்த பணிகள் குறித்து தங்கள் கமிட்டியில் பேசி முடிவு தெரிவிப்பதாக தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுமதியம் 2:00 மணிக்குள் தரினத்தை கட்டாயம் முடிக்க வேண்டும். கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு, அதனால், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கோவில் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு தரிசனத்தை விரைவில் முடிக்க முயற்சி செய்கிறோம் என தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலால் அதிகாரிகள் அதிருப்தியடைந்தனர். நடராஜர் தேரோட்டத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலிமைத் தன்மை சான்றிதழ் அளிக்க, சான்று கட்டணமாக 5,000 ரூபாய் செலுத்த தீட்சிதர்கள் ஒப்புக்கொண்டனர். நகராட்சி சார்பில், நான்கு சாலைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர், கழிவறை போன்ற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினர் தேரோடும் ரோடுகள் சீரமைக்க வேண்டும். மின்வாரியம் மின் இணைப்புகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என துறை அதிகாரிக ளுக்கு சப் கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், கூட்டத்தில் எந்த முடிவும் தீர்க்கமாக எடுக்கப்படாமல் சம்பிரதாயத்திற்காக நடந்த கூட்டமாகவே இருந்தது.