பழநி பக்தர்களிடம் அடாவடி வசூல்: தனியார் குளியலுக்கு அதிக கட்டணம்!
பழநி: புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலமான பழநிக்கு வரும் பக்தர்களிடம் கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுவதால், குடும்பத்தினருடன் குளிக்க விரும்புபவர்கள் சிரமப்படுகின்றனர். பழநி மலைக்கோயிலுக்கு விழாக்காலங்களை தவிர்த்து சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் போதிய மழை பெய்யாததால் வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு அணைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளன. பக்தர்கள் புனித நீராடும் இடங்களான சண்முகநதி, இடும்பன்குளம், வரட்டாற்றிலும் தண்ணீர் இல்லை. ஊற்றுகிணறுகளும் வற்றியுள்ளன. இதனால், பக்தர்கள் தனியார் கட்டண குளியல் மற்றும் கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். குளங்களில் தண்ணீர் இல்லாததை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு குளிப்பதற்கு கட்டணமாக நபருக்கு ரூ.30 வசூலிக்கின்றனர். கழிப்பறைக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயித்துள்ளனர். குடும்பத்துடன் குளிக்க நினைக்கும் பக்தர்கள் இதனால் சிரமப்படுகின்றனர். நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இலவச கழிப்பறைகளிலும் இதே நிலைதான் உள்ளது. மறைமுக கட்டணம் வசூலித்து பக்தர்களை அவதிக்குள்ளாக்குகின்றனர். இதை தடுப்பதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.