திருப்பரங்குன்றம் கோயிலில் இனி நெய் விளக்குதான்: நிர்வாகம் அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெண்ணை உருண்டை விற்பனை ஏலம் ரத்து செய்யப்பட்டு, நெய்தீபம் விற்பனையை கோயில் நிர்வாகம் துவக்கி உள்ளது. கோயிலில் பத்ரகாளி அம்மன் சிலை மீது பக்தர்கள் வெண்ணை உருண்டை வாங்கி சாத்துப்படி செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். கடந்த ஆண்டு விற்பனை ஏலம் ரூ.8.14 லட்சத்திற்கு போனது. ஒரு உருண்டை ரூ.3க்கு விற்க நிர்வாகம் உத்தரவிட்டது. ஏலம் எடுத்தவர்கள் ரூ.5க்கு விற்றனர். இதனால் இந்த ஆண்டு ஏலம் ரத்து செய்யப்பட்டு, நெய்தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் துணை கமிஷனர் பச்சையப்பன் கூறியதாவது: வெண்ணை உருண்டை அதிக விலைக்கு விற்றதோடு, பக்தர்களை கட்டாயப்படுத்தி வாங்க செய்தனர். வெண்ணை தரமாக இல்லாததால், அம்மன் சிலை பாதிப்படைந்தது. சிலையை பாதுகாக்கும் பொருட்டு நெய்தீபம் விற்பனையை கோயில் நிர்வாகமே ஏற்றுள்ளது.நேற்று முதல் நாள் விற்பனையில், காலை முதல் பகல் வரை 500 விளக்குகள் விற்றன. வெண்ணை ஏலத்தொகையை- காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக கோயிலுக்கு வருமானம் கிடைக்கும். பல ஆண்டுகளாக வெண்ணெய் சாத்துப்படி செய்யப்பட்ட பத்ரகாளியம்மன் சிலையை சுத்தம் செய்யும் பணி விரைவில் துவங்கும், என்றார்.