உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை கோவில் கும்பாபிஷேகம்: முளைப்பாரி, புனித நீர் ஊர்வலம்!

சிவன்மலை கோவில் கும்பாபிஷேகம்: முளைப்பாரி, புனித நீர் ஊர்வலம்!

திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, முளைப்பாரி மற்றும் புனித தீர்த்த கலச ஊர்வலம் நேற்று நடந்தது. காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, மழை பெய்யவும், விவசாயம், தொழில் செழிக்கவும், மக்கள் சகல செல்வங்களும் பெற்று வாழ வேண்டி, கடந்த 22ம் தேதி, காங்கயம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் முளைப்பாரி இட்டனர். நேற்று மாலை 4.00 மணிக்கு, காங்கயம் கரூர் ரோடு, பகவதியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. ஏராளமான பெண்கள், முளைப்பாரி எடுத்து வந்தனர். முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட யானையில் புனித தீர்த்த கலசம் கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தின் முன், மேள தாளம், நாதஸ்வரம், தாரை தப்பட்டை, டிரம்ஸ், செண்டை வாத்தியம், வாடிப்பட்டி கொட்டு மற்றும் சலங்கையாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், மதுரை கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாத்தியங்களுடன், நடனம் ஆடி வந்தனர். கோவிலில், சுப்ரமணியருக்கு சிறப்பு யாகம் நடந்தது. இன்று, காலை புனித நீர் கொண்டு வருதல், மாலை 5.00 மணிக்கு, முதல்கால யாக யூஜை நடக்கிறது. நாளை காலை, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5.00 மணிக்கு, மூன்றாம் காலயாக யூஜை நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு, மூலாலய மூர்த்திகளுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 4ம் தேதி காலை, நான்காம் கால யாக யூஜை, காலை 5.45 மணிக்கு, பரிவார விமான தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், 9.00 மணிக்கு மேல் 10.00  மணிக்குள், ராஜகோபுரம், மூலாலய விமானம் மற்றும் சிவாச்சல மூர்த்திக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு, திருக்கல்யாணம் மற்றும் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !