கும்பாபிஷேகத்திற்கு சிலை கரிக்கோலம் விடும் நிகழ்ச்சி!
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் அரிச்சந்திரன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிலை கரிக்கோலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மலட்டாற்றின் முகப்பில் அரிச்சந்திரன் சிலை நீண்ட காலமாக இருந்து வந் தது. பிரேதத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்வோர் இச்சிலைக்கு காணிக்கை செலுத்துவர். கடந்த ஆண்டு சாலை விரிவாக்கம் செய்தபோது மர்மநபர்கள் சிலையை திருடிச்சென்றனர். ஊரில் அடிக்கடி இறப்பு நேரிட்டதால் மக்கள் கவலையடைந்தனர். அருளாளர் சுந்தரர் அருட்சபை சார்பில், பொதுமக்கள் பங்களிப்புடன் அரிச்சந்திரனுக்கு சிலை அமைத்து கும்பாபிஷேகம் நடத்திட திட்டமிடப்பட்டது. இதற்கான பூமி பூஜை கடந்த மே மாதம் 2ம் தேதி நடந்தது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிச்சந்திரனுக்கு புதிய கோவில் கட்டப்பட்டு இன்று காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக நேற்று மாலை 4:30 மணிக்கு சிலை கரிக்கோலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகளின் வழியே சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கின. ஏற்பாடுகளை அருளாளர் சுந்தரர் அருட்சபை நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.