வெயில், மழையில் வீணாகும் வீரட்டானேஸ்வரர் தேர்!
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருத்தேர் வெயில், மழையில் நனைந்து வீணாவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி திருவதிகையில் 2000ம் ஆண்டு பழமை வாய்ந்த பாடல் பெற்ற அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருத்தேர் 10 ஆண்டுகளுக்கு பிறகு அறநிலையத்துறை மற்றும் பொதுமக்கள் பங்களிப்பின் மூலம் கடந்த 2012ம் ஆண்டு 30 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் நடந்தது. பின் கடந்த 2013ம் ஆண்டு வைகாசி மாதம் உற்சவத்தில் திருத்தேர் வீதியுலா நடந்தது.பிரம்மோற்சவம் நடந்து முடிந்த பின் அறநிலையத்துறை அதிகாரிகள் திருத்தேரின் பாகங்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்து வீணாகாதபடி தி ருத்தேருக்கு இரும்பு தகடுகளால் நிழற்குடை ஏற்படுத்தவோ அல்லது, தேரின் முழு பகுதியையும் பாதுகாத்திட எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. திருநாவுக்கரசர் தொண்டு நிறுவனத்தினர் பழைய டிஜிட்டல் பேனர்களை கட்டி பெரிய பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்தனர். இந்நிலையில் கடந்த 12ம் தேதி திருத்தேர் உற்சவம் நடந்தது. பின் திருத்தேரை பாதுகாத்திட எவ்வித முயற்சியும் இல்லாததால் திருத்தேர் வெயில், மழையில் நனைந்து பாதித்து வருகிறது. புதிய தேர் செய்ய தற்போது ஒரு கோடி ரூபாய் செலவாகும் நிலையில் பழமை வாய்ந்த தேரை பாதுகாத்திட அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சிக்காதது வேதனைக்குரியது. இதற்கு மாவட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.