சிதம்பரம் நடராஜர் தேரோட்டம் கோலாகலம்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி நடராஜர் தேரோட்டம் இன்று காலை நடந்தது. பல்லாயிரகனக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்றனர். பிரசித்திப் சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி கோவில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவம் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினம் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் விதி உலாக்காட்சி நடக்கிறது.
உற்சவத்தில் இன்று நடராஜர் சுவாமி திருத்தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைப்பெற்று சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. சுவாமி சித்சபை ரதயாத்திராதானம் நிகழ்ச்சியைதொடர்ந்து தேவாரம் திருவாசகம் பாட, மேளதாளங்கள், வானவேடிக்கையுடன் சுவாமி புறப்பாடு செய்து காலை 6 மணிக்கு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியருளினார். தேரில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடக்கப் பெற்று, உற்சவ ஆர்ச்சாரியார் ரத்தினசபாபதி தீட்சிதர் காலை 8.15 மணிக்கு வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். முதல் தேராக விநாயகர், முருகர் தேரை தொடர்ந்து நடராஜர் சுவாமி, சிவகமாசுந்தரி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் சென்றது. நடராஜர் சுவாமி மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு வீதிகளில் மண்டகப்படிதாரர்கள் வீட்டின் முன்பு நின்று 4 கிராம் தங்க காசுகள் தட்சனை வைத்து சிறப்பு தீபாராதனைகளுடன் தேரோட்டம் நடந்தது. நான்கு வீதிகளில் 90 மண்டகப்படிதாரர்கள் தீபாராதனை அளித்தனர்.