உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் அய்யப்பன் கோவிலில் 1,008 சகஸ்ர நாம பூஜை!

திருப்பூர் அய்யப்பன் கோவிலில் 1,008 சகஸ்ர நாம பூஜை!

திருப்பூர் : திருப்பூர், அய்யப்பன் கோவில் பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு, 1008 கலச சகஸ்ர நாம பூஜை நேற்று நடந்தது; அபிஷேகம் இன்று நடக்கிறது. திருப்பூரில் உள்ள அய்யப்ப பக்தர்கள் இணைந்து, குமாரசாமி திருமண மண்டபத்தில், பஜனை நடத்தி வந்தனர். 1966ம் ஆண்டு, ஸ்ரீஐயப்ப பக்த ஜன சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். அங்கு பஜனை நடந்து வந்த நிலையில், 1977ம் ஆண்டு, அய்யப்பன் கோவில் அமைக்கப்பட்டு, சிலை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் செய்தனர். சிறிய அளவில் உருவான இக்கோவில், தற்போது, தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐம்பொன் கோவிலாகவும், விநாயகர், மாளிகைபுரத்து அம்மன், முருகன், நவக்கிரகங்கள், நாகர் என பரிவார தெய்வங்களுக்கு சன்னதிகளும் அமைக்கப்பட்டன. இக்கோவில் பிரதிஷ்டா தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. நேற்றிரவு, சபரிமலை, பிரதம தந்திரி ஸ்ரீகண்டரு மோகனரு தந்திரி தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் ஊர் நலன், செல்வ செழிப்பு, மக்கள் நலன் வேண்டி, 1,008 கலச சகஸ்ர நாம பூஜை நடந்தது. கலசங்களில் பல்வேறு திரவியங்கள் ஊற்றப்பட்டு, பூஜை நடந்தது. இன்று காலை 5.00 மணிக்கு மகா கணபதி ஹோமம், 6.50 மணிக்கு அனைத்து அபிஷேகம் நடக்கிறது. காலை 10.00 மணிக்கு, களபாபிஷேகம் மற்றும் 1008 கலசங்களில் உள்ள திரவியங்களை கொண்டு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பகல் 12.00 மணிக்கு, அன்னதானம், மாலை 6.00 மணிக்கு, புஷ்பலங்காரம், 6.30 மணிக்கு, மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !