உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிங்கப் பெருமாள் கோயிலில்உபயதாரர் திருப்பணி துவக்கம்

நரசிங்கப் பெருமாள் கோயிலில்உபயதாரர் திருப்பணி துவக்கம்

உத்தமபாளையம்;உத்தமபாளையம் யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் உபயதாரர் திருப்பணி வேலைகள் நேற்று துவங்கியது. உத்தமபாளையத்தில் 800 ஆண்டுகள் பழமையான யோக நரசிங்கப் பெருமாள்-மகாலட்சுமி கோயில் உள்ளது. இக்கோயிலில் இறுதியாக 1943 ல் திருப்பணிகளும் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதன் பிறகு இக்கோயில் பராமரிக்கப்படாமலும், புனரமைப்பு பணிகள் செய்யப்படாமலும் விடப்பட்டதால் கோயில் கட்டடங்கள் சேதமடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அறநிலைத்துறையிடம் இக்கோயில் புனரமைப்பு, திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு நிதி கேட்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் நிதி தாமதப்படுத்தப்பட்டு வந்தது. இதனிடையே 2010 ல் அறநிலையத்துறை திருப்பணிக்காக ரூ.10 லட்சம் ஒதுக்கியது. ஆனால் அந்த நிதியில் பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, நிதி பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலின் நிலையும் பராமரிப்பும் மிகவும் மோசமடைந்ததை கருத்தில் கொண்டு, உத்தமபாளையம் நமோ நாராயணா பக்த சபையினர் இக்கோயிலில் அனைத்து கால பூஜைகளையும், சிறு புனரமைப்புகளையும் செய்து பராமரித்து வந்தனர். இந்நிலையில் இக்கோயிலில் உள்ள திருப்பணிகளை உபயதாரர்கள் வாயிலாக செய்துகொள்ள கடந்தாண்டு அரசு அறிவிப்பு செய்தது. இதனையடுத்து முதல் பணியாக நமோ நாராயணா பக்த சபையின் வாயிலாக, கருடாழ்வார் சன்னதியை மாராமத்து செய்து புதிதாக மேல் விமானம் கட்டும் பணி நேற்று துவங்கியது. ரூ. 1 லட்சம் திப்பீட்டில் செய்யப்படும் இப்பணிக்கான துவக்க நிகழ்ச்சியில், நமோ நாராயணா பக்த சபையினர், பி.டி.ஆர்., பண்ணை விஜயராஜன், ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் துரைப்பாண்டியன், ஞானம்மன் கோயில் மறவர் சங்க தலைவர் ராஜசேகரன், ஒக்கலிகர் சங்க தலைவர் ஜோதிராஜ், கொடிமர உபயதாரர் கார்த்திகேயன், காளாத்தீஸ்வரர் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அய்யம்பெருமாள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !