திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7 ல் வருஷாபிஷேக விழா!
தூத்துக்குடி,: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்முருகன் கோயிலில் ஜூலை 7 ம் தேதி திங்கள்கிழமை வருஷாபிஷேக விழா நடக்கிறது.முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை வருஷாபிஷேகம் நடக்கும். மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமான தை உத்திரத்தில் இது நடக்கும். கோயில் கும்பாபிஷேகம் நடந்த தினத்திலும் வருஷாபிஷேகம் நடக்கும். வரும் ஜூலை 7 ம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட தினம் வருகிறது. ஆனிமாதம், உத்திர நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அன்று காலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் வருஷாபிஷேக தினத்தில் முருகனுக்கு அபிஷேகங்கள் நடக்கும். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடக்காது. குமரவிடங்கபெருமான் இரவு வள்ளி, அம்பாளுடன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், பொறுப்பு இணை கமிஷனர் ஞானசேகரன் செய்து வருகின்றனர்.