கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
கொடுமுடி: பல்லாயிரக்கணக்கான பக்தர்களின், பக்தி கோஷத்துடன், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் பழமையான வடிவுடையநாயகி அம்மன் உடனமர் மகுடேஸ்வரர், மகாலட்சுமி தாயார் சமேத வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இது, திருஞானசம்பந்தர் உள்ளிட்டோரால் பாடல் புகழ் பெற்ற ஸ்தலமாகும். மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றுமே, சிறப்பு பெற்ற ஸ்தலம். இங்கு, கடந்த, 1999 ஆகஸ்ட், 25ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, அறநிலையத்துறை சார்பில், 1.09 கோடியிலும், உபயதாரர்கள் சார்பில், 42 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணி நடந்தது. இப்பணிகள் நிறைவு பெற்று, கடந்த, 2ம் தேதி யாகசாலை பூ ஜை துவங்கியது. காலை, 9.20 மணிக்கு, வேத விற்பன்னர்கள் கோபுர கலசங்களில், புனித நீர் ஊற்ற, ராஜகோபுரம் மற்றும் பிற சன்னதிகளில் உள்ள கலசங்களுக்கு, ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. மங்கள வாத்தியம், வேத மந்திரம் முழங்க, சிவனடியார்கள் தேவார பாடல்களை பாடினர். அரோகரா, அரோகரா என, பக்தர்கள் கோஷம் எழுப்பினர். ஹெலிகாப்டரில் இருந்து, பூத்துõவினர். சிவன் கோவிலுக்கு தண்டபாணி சிவாச்சாரியா ரும், பெருமாள் கோவிலுக்கு ஸ்ரீதர் பட்டாச்சாரியர் தலைமையிலும் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை காண, ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். கும்பாபிஷேக புனித நீரை, ஸ்பிரிங்ளர் மூலம் பக்தர்கள் மீது தெளித்தனர். கும்பாபிஷேகம் நிறைவு பெற்றவுடன், பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.