வங்கனூர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்!
ஆர்.கே.பேட்டை: அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூர் அஷ்டலட்சமி உடனுறை நாராயண பெருமாள் கோவில், மூன்றாம் ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தணி முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கர் மற்றும் வங்கனூர் கிராம கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 6:30 மணிக்கு உற்சவர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு அர்த்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வேதவிற்பன்னர்கள் மந்திரம் ஓத, கோவில் கொடிமரத்தில், பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி வலம் வந்தார். பகல் 12:00 மணியளவில், உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. இரவு சந்திர பிரபையில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.