பாபநாசத்தில் ஆடி அமாவாசை தாமிரபரணியில் மக்கள் வழிபாடு
திருநெல்வேலி :ஆடி அமாவாசையையொட்டி பாபநாசம் கோயில் முன்பாக தாமிரபரணியில் ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் கரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசைத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 14ம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி பொங்கலிட்டு வழிபட்டனர். இரவில் தீ மிதி விழா நடந்தது. நேற்று ஆடி அமாவாசையன்று பாபநாசத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து தர்ப்பணம் செய்தனர். பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் இந்த தர்ப்பணம் செய்வதால் பாவங்கள் நீங்கி மோட்சம் பிறக்கும் என்பதும் நம்பிக்கை. நேற்று அதிகாலை 4 மணி அளவில் பாபநாசம் சிவன் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதே போல் குற்றாலம் மெயின் அருவி, நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.